தனியார் தொலை தொடர்பு நிறுவன ஊழியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரகம் முன்பு திரண்ட ஊழியர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த விபரம் வருமாறு ;
திருச்சி மாவட்டம், பீமநகர் கூனி பஜார் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் (24). இவர் தனியார் தொலை தொடர்பு நிறுவனத்தில் (ஏர்டெல்) டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஏர்போர்ட் அருகே உள்ள ஜேகே நகரில் வசிக்கும் சீனிவாசன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதாப்பை தொடர்பு கொண்டு தனது வீட்டில் நெட்வொர்க் ஒயர் பழுதடைந்துள்ளது அதனை சரி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதன் அடிப்படையில் பிரதாப் மற்றும் அவரது நண்பர் ஆசிக் அலி ஆகிய இருவரும் சீனிவாசன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு மது போதையில் இருந்த சீனிவாசன் மற்றும் அவரது நண்பர்கள் தங்கள் கூறிய நேரத்தில் நீங்கள் ஏன் வரவில்லை, தாமதமாக வந்துள்ளீர்கள் என பிரதாப் மற்றும் ஆசிக் அலி ஆகிய இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையடுத்து படுகாயம் அடைந்த இருவரும் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
இந்நிலையில் ஏர்போர்ட் காவல் துறையினர் தாங்கள் வழங்கிய புகாருக்கு உண்டான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யாமல், சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தங்களது புகாரின் உண்மை நிலை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் தாக்குதல் நடத்திய நான்கு பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பிரதாப், ஆசிக் மற்றும் அவர்களுடன் பணி புரியும் தொலைதொடர்பு நிறுவன ஊழியர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர், இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு அளிப்பதற்காக திரண்டனர்.
அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், தாக்குதல் நடத்திய நான்கு பேரில் காவல்துறையினரின் குடும்பத்தினர் சம்பந்தப்பட்டு இருப்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்துகின்றனர். எங்களுக்கு உரிய தீர்வு வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.


0 Comments