திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில்,... இந்திய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் காலடி பதித்த இடத்தில் அவரது பெயரால் இன்றளவும் காந்தி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. திருச்சி மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள ஐந்து மாவட்டங்களை சார்ந்த பொதுமக்கள் அடிப்படை தேவைகளுக்கு ஏற்ப காய்கறிகளை வாங்கி வருகின்றனர். காந்தி மார்க்கெட் பகுதியை சார்ந்து சுமார் 2300 வியாபாரிகளின் குடும்பங்களும், கடை ஊழியர்களும் மற்றும் விவசாயிகள், சுமை பணி கூலியாட்கள், மகளிர் வியாபாரிகள் என தோராயமாக சுமார் 10,000 குடும்பங்கள் முழுக்க முழுக்க காந்தி மார்க்கெட்டை நம்பியே வாழ்வாதாரம் அமைந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் திருச்சி மாவட்ட நிர்வாகம் கடந்த 2024 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்போதைய ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் காந்தி மார்க்கெட்டை இடமாற்றம் செய்யக்கூடாது. மேலும் புதிதாக திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் அமைய உள்ள காந்தி மார்க்கெட், காந்தி மார்க்கெட் பகுதியில் கடை வைத்திருக்கும் நபர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இதுகுறித்து தற்போதைய மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து புதிதாக பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் காந்தி மார்க்கெட்டில் தற்போது காந்தி மார்க்கெட் பகுதியில் கடை வைத்திருக்கும் நபர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு மட்டுமே கடைகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட மாவட்ட ஆட்சியர் சரவணனிடம் மனு அளித்தனர்.
மனு அளித்த பிறகு காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
காந்தி மார்க்கெட் தொடர்ந்து அப்பகுதியில் இயங்க வேண்டும். அங்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். அதேபோல புதிதாக கட்டப்பட்டு வரும் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த காய்கறி மார்கெட்டில், காந்தி மார்க்கெட்டில் கடை வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து அங்கு கடைகள் வழங்க வேண்டும் என இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளோம். இது குறித்து வணிகர்களை கூட்டி விரைவில் ஒரு கூட்டம் நடத்தப்படும். அதன் பிறகு வியாபாரிகள் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். மேலும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஏற்கனவே கூறியது போல திருச்சி காந்தி மார்க்கெட் அருகே செயல்பட்டு வரும் மகளிர் சிறையை வேறு இடத்திற்கு மாற்றி, அந்த இடத்தில் காந்தி மார்க்கெட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும். இதன்மூலம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்பட்டு பொதுமக்கள், வணிகர்கள் எந்த சிரமமும் இன்றி இருக்கலாம். இதனையும் அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

0 Comments