அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்குக் கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாகக் குழு அமைக்க வேண்டும், அது தொடர்பான அறிக்கையை 3 மாதங்களில் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2023ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தமிழக அரசு அமல்படுத்தாமல் இருந்தது தெரியவந்தது.
இதற்குக் கண்டனம் தெரிவித்த நீதிபதி கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை பதவியில் உள்ள தலைமைச் செயலாளர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு தரப்பு வாதத்தைக் கேட்டறிந்தது, அப்போது வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாகக் குழு அமைக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது எனத் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கும் கண்டனம் தெரிவித்த நீதிபதி பட்டு தேவானந்த் நீதிமன்றம் தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பின்தான் தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

0 Comments