திருச்சி மாநகராட்சி 65 வார்டு பகுதிகளிலும் வார்டு மகா சபை சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.
திருச்சி மாநகராட்சி பொதுமக்களுக்கு வழங்கப்படும் அடிப்படை சேவைகளை மேம்படுத்திட 65 வார்டு பகுதியில் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் மாநகராட்சி அலுவலர் கூட்டணராக கொண்டு வார்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், குடியிருப்போர் நல சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்புடன் வார்டு அளவிலான கோரிக்கைகள் செயல்படுத்தும் விதமாக வார்டு மகாசபை சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
அந்த வகையில், திருச்சி மாநகராட்சி மண்டலம் 5 , வார்டு எண் 27 ஆட்டுமந்தை திறந்தவெளி உடற்பயிற்சி மையத்தில் மேயர் மு. அன்பழகன் தலைமையில் வார்டு பகுதி மகாசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடியிருப்பவர் நல சங்கத்தினர், அப்பகுதி மக்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு மேயரிடம் மனுக்களை கொடுத்தனர்.
அதைப்போல், மாநகராட்சி 38- வது வார்டுக்கு உட்பட்ட அண்ணா நகர் பள்ளிவாசலில் பகுதி மகாசபா கூட்டம் மாமன்ற உறுப்பினர் மு.தாஜுதீன் தலைமையில், உதவி செயற்பொறியாளர் நரசிங்கமூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது. அதில் எஸ் டி பி ஐ கட்சியின் கல்வியாளர் அணி சார்பில் மாவட்ட தலைவர் எஸ் எஸ் ரஹமத்துல்லா தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
திருச்சி பாப்பாக்குறிச்சி காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்து ஐநூறு மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு போதிய கழிப்பிட வசதி இல்லாத காரணத்தால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இருக்கக்கூடிய கழிப்பறைகளும் பழுதடைந்து இருப்பதால் மாணவ மாணவிகளுக்கு தொற்று நோய் ஏற்படுகிறது.
எனவே, இரண்டு பள்ளிகளுக்கும் புதிய கழிப்பறை வசதியை ஏற்படுத்தி தர ஆவன செய்ய வேண்டுமாய் மாணவ மாணவிகளின் சார்பாகவும் எஸ்டிபிஐ கட்சியின் கல்வியாளர் அணி சார்பிலும் மனு கொடுக்கப்பட்டது.
மாநகராட்சி 39 வது வார்டு சிறப்பு கூட்டம் மாமன்ற உறுப்பினர் எல்.ரெக்ஸ் தலைமையில், மாநகராட்சி அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற்றது. கனமழையின் பாதிப்பு குறித்தும், விழிப்புணர்வு ஆயத்தப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. புதிய மின் விளக்கு, சாக்கடை தூர்வரும் பணிகள் முடுக்கிவிடப்பட்டது. பகுதியின் வளர்ச்சி குறித்தும் மக்களின் அடிப்படை தேவைகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. நிகழ்வில் பகுதியின் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.

0 Comments